அற்றைத் திங்கள் எண்ணமெல்லாம்
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் நீ எனக்கில்லை
இதயம் எரிந்து வேகுதடி..!
கற்றை மொழிகள் எத்திசையும்
உந்தன் குரலில் ஒலிக்கிறதே
ஒற்றைச் சொல்லாய்நீ உச்சரித்த
எந்தன்பெயரும் காற்றில் அலைகிறதே...!
உற்றதெல்லாம் தொலைந்தது போல
மிச்சமுள்ள உயிரும் என்னில்
குற்றுயிராய்க் கிடக்குதிங்கே
சொச்சமுள்ள உன் நினைவினாலே...!
பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...!
வெற்றாய்ப் போன வாழ்வெனது
விருப்பாய்க் கொள்ள ஏதுள்ளது..?
கற்றதெல்லாம் உன்னையன்றி
கருத்தில் ஒன்றும் கருதிடவில்லை..!
ஒற்றைப் பாதையது உன்வாசல் மட்டும்
போகத்தெரிந்த கால்களின்று
பற்றைக்காடு மேடெங்கும் அலைந்து திரிகிறதே
கைகள் கோர்த்த வுன் கரமெங்கே...?
சுற்றம் யாவும் சூழ்ந்திருக்க
சூனிய உலகில் உன்னுடன் நானே
மற்றோர் சிரிப்பில் தெரிந்து கொண்டேன்
மன(ம்)நிலை இன்றி ஆனேனென்று..!
அற்றைத் திங்கள் எண்ணமெல்லாம்
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் எனக்கில்லை
இதயம் எரிந்து வேகுதடி..!