சிலேடை வெண்பாக்கள்

பயிற்சிக்காக எழுதிய பாக்கள், பக்குவமாகாவிட்டாலும் பழகிடுவோம் எனும் முயற்சியே :)

படகும் கணணியும்.




பலகை பலவும் இணைந்தே இயங்கும்
உலவிட அக்கரை சேர்க்கும் - செலவிட
சொந்தமாய் வேலை வலையில் தருமிது
விந்தை அழகாம் புவிக்கு...! :)


படகு



பலகையிலான துடுப்பை பல கைகளால் வலிக்க படகு இயங்கும் (பலகை களினால் ஆனதும் படகு எனவும் கொள்ளலாம்)
சுற்றித்திரிய அடுத்த கரைக்குச்சேர்ப்பதற்கும் உதவும்... அத்துடன் வலை போன்றவற்றை வாங்கி (செலவிட) மீன்பிடித்தல் போன்ற சுய தொழிலைச் செய்யக் கூடியத்தாக்கும், செயற்கையாய் செய்தாலும் படகு நீர் நிலைகளில் இருக்கும்போதும் பூமிக்கு அழகு சேர்ப்பதாக இருக்கும்.



கணணி



பல கைகள் கொண்டு (விசைப்பலகை எலியார் :) )போன்றவற்றை இயக்க இயங்கும். இங்கிருந்து கொண்டே பல இடங்கள் பற்றி அறியவும் அம்மக்களோடு பழகவும் உதவியாகும்(இணையமூலம்) அத்துடன் பணம் முதலிட்டு இணையமூலம்(வலையினில்) சொந்தமாக தொழிலும் செய்ய உதவும். பூமியில் அழகான ஒரு சாதனம்..! :cheese: 



********************************************************************************************



குழந்தையும் தீவிரவாதமும்.


தோன்றும் மிவர்தோற்றம் தோற்றிடத் தோன்றுவர்
வேண்டும் மிதுவென்றே வேண்டிடுவார் - ஈன்றும்
மவர்தேவை தீர்க்கா விருந்திடின் போராம்
கவலையிலும் தேடும் வழி..! 


குழந்தை

குழந்தைகளின் பிறப்பு தானாக நிகழ்வதிலை அதனைத் தோற்று விக்கின்றார்கள் பிறந்த குழந்தை விருப்பத்துடன் ஏதாவது பொருளோ...அல்லது உணவோ வேண்டி கேட்கும் ஆனால் அக்குழந்தையினை ஈன்ற அல்லது தோன்றக்காரணமானவர்கள் குழந்தையின் விருப்பினை தீர்க்காது இருந்தால் வேறு வழியின்றி அழுது புரண்டு போராடி தனது விருப்பினை அடைய முனையும்


தீவிரவாதம்


தீவிரவாதமும் தானாக தோன்றுவதில்லை சில இன, மொழி, மதத்தவர்களினால் உருவாக்கப் படுகின்றது . அத்தீவிரவாதமானது ஏதாவது ஒரு தமது கொள்கையை குறிக்கப் பட்ட சமூகத்திடம் கேட்கும் ஆனால் அது கிடைக்காத பட்சத்தில் வேறு வழி இன்றி போராடியே தமது விருப்பினை அடைய முனையும்...!
********************************************************************************
காதலும் ரயிலும்




கட்டிப் பிடித்தோடும் கண்ணின்றிப் போனாலும்
எட்டும் வழியோடும் மென்றாலும் - தட்டித்
தடம்மாறும் போதெல்லாம் தன்னை யிழக்கத்
திடமாகும் காதல் ரயில்..!



ரயில்

ரயிலானது தண்டவாளத்தினை இறுகப் பற்றியபடியே ஓடும். அதனில் திருப்பி இல்லை(ஸ்ரேரிங்) ஆனால் தண்டவாளம் போகும் வழியிலேயே போகும் தடம்புரழும்போது சேதமாகி ஓடாமல் போகும் 



காதல்

காதலர் இருவரும் மிக நெருக்கமாகப் போவர் காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வர் அவர்கள் தமக்கே உரிய வழியில் வாழ்வர் ஆனால் காதலில் தடங்கல் வரும்போது தம்மை இழக்கவும் தயங்கிடார்.


****************************************************************************
நாயும் கடலும்.


அலையும் நெருங்கிடக் காலணைக்கும் எம்மைக்
கொலையும் புரிந்திட வெண்ணும் - கலையாய்
இவையுமே மண்ணரிக்கும் எல்லையும் காக்கும்
அணைத்தால் நனைத்திடும் நீர்..!



நாய்


அலைந்து திரியும், காலைச்சுற்றிச் சுற்றி வரும், கோபம், வருத்தம் வந்தால் கடித்துக் குதறும்(கொலையும் செய்ய நினைக்கும்) சும்மா மண்ணைக் கிண்டியபடி இருக்கும்(மண்ணரிக்கும்) வீட்டினைக் காக்கும் (கள்ளன் வந்தால் குரைப்பது போன்ற) ஆசையாய் அணைத்தால் நாவினால் நக்கி ஈரமாக்கும் :joker: 




கடல்

அலையடிக்கும் கரையில் போய்நிற்கும் போது அலை காலைஉரசிடும், கொந்தளிப்பு சுனாமியின்போதும் எம்மை உள்ளிளுத்து கொன்றுவிடும், இவை மண்ணரிப்பை ஏற்படுத்தும்,சில நாடுகளின் எல்லைகள் கடலால் இருக்கும் (இலங்கை போன்ற) கடலை / அலையை அணைக்கும்போது நனைத்துவிடும்... :flower: 



******************************************************************************************************
கட்டுச்சோறும் கடிகாரமும்.

கட்டும் கைகள்சிறக்கும் காலம் அறிவிக்கும்
ஒட்டியே கூடவரும் மெப்போதும் - வட்டினில்
வார்த்திருக்கும் கல்லும் கலந்திருக்கும் பார்த்திருக்க
ஈர்த்திடும் பண்பாம் இவைக்கு!



கட்டுச் சோறு


கட்டுச்சோறு கட்டித்தருபவரை உண்ணும் போது நினைக்க அவர் பாசம் சோற்றில் தெரிய அவர் கைகள் சிறப்புடையதாக எமக்கிருக்கும் :)
கட்டுச்சோறை பார்க்கும் போது உணவருந்தும் நேரத்தை ஞாபகப் படுத்தும்,
கட்டுச்சோறை போட்டுக்கொண்டு போக அது எம்முடன் கூடவே வரும்.
(வட்டு)கோப்பை, இலை போன்ற பாத்திரத்தில் போட்டு கட்டியிருக்கும், சோற்றில் சிலநேரம் கல்லும் கலந்திருக்கும், பசியில் கட்டுச்சோற்றைப் பார்க்க அதை உண்ணச்சொல்லி எம்மை ஈர்க்கும்,
 



கடிகாரம்


கடிகாரம் கட்டி இருக்கும் கைகள் அழகாக சிறப்பாக இருக்கும் , கடிகாரம் நேரத்தை அறிவிக்கும், கடிகாரம் கட்டிப் போக எம்முடன் கூடவே வரும்.
கடிகாரம் அதற்கென உள்ள கோப்பையில் இணைத்து இருப்பார்கள் , கற்கள் மூலம் அலங்கரித்தும், இருக்கும், பார்க்கும்போது கவர்ச்சியாக இருக்கும். 






வாசனின் பிறந்த நாள் வாழ்த்து!


பற்றும் கொடி..!



நெடுந் துயர் வளர்ந்திடும் மரமும்
விழுதெனப் படர் பெரு விருட்சமும்
விழும் திசைக் காற்றினில் தலையசை
செடியுடன் நிலம் படர்ந்தொரு கொடியென்
வீட்டுக் கொல்லையில்...!


பிடி மண் மீதொரு பிடிப்பின்றி
அலைந்திடும் கொடியது அணைப்பினில்
நெடுந்துயர் மரமது கனிந்தது
இனியதன் வாழ்வும் இனிதெனக்
கொடியதன் அணைப்பினில் கொண்டது..!


கொடிவேர் மரமதில் பற்றிடப்
பிடியதன் வாயினில் கரும்பென
கொடுமையாய் ஆனது மரமும்
கொழு கொம்பெனப் போனது..!

பிடிப்புடன் பற்றிடும் யாவும்
உற்ற நல் பற்றல்ல
பிடிப்பது பிணிதரும் போதினில்
பாரற்றுப் போய்விடும் மரமும்..!
மனமும்...!

சுவீஸ் பயணமும் நிஷாவுடன் சந்திப்பும்...




கோடை விடுமுறை விடைபெற இருந்த வேளை எங்காவது போகலாமா...? எனும் எண்ணம் எழுந்து நெஞ்சைச் சுரண்டியது “போலாமே” என்று எனது எண்ணத் தீக்கு நெய்யிட்டாள் அன்பு மனைவி.
பிள்ளைகளின் ஆரவாரம் “அங்கே போவோம் ... இல்லை.. இல்லை  இங்கே போவோம்”  என்றிருக்க, அம்மா சொன்னார் “ரூபியின் பிள்ளையின் விஷேஷம் ஊருக்குப் போய்த்தான் செய்தார்கள் ஒருக்கால் சுவீசிற்குப் போய் அங்கேயும் போய் வருவோமே..!” என்று.
“அர்ரா சக்கை... அப்ப நீங்களும் கிளம்பியாச்சோ..?”  என மகிழ்வுடன் பயணத்தை எப்படி நகர்த்தலாம் எனும் திட்டத்தை எல்லோருமாகப் போட்டோம்.....  
எங்களில் எட்டுப் பேர் எல்லோரும் விமானத்தில் போனால் உறவினர்க்கு ஏற்றி இறக்கச் சிரமமாகிவிடும், எனது வாகனத்தில் ஏழுபேரே போகலாம், அப்படியென்றால் யார் நிற்பது...?
ஒவ்வொருவரும் தாம் நிற்பதாக முடிவெடுக்க இறுதியில் அப்பாவே அந்த அதிஷ்ரசாலியாகினார்.

ஆகஸ்ட் 26ம் திகதி வீட்டில் இருந்து கிளம்பி ஒரு மணி நேரட்தில் Eurotunnel ஐ வந்தடைந்தோம் அங்கிருந்து 35 நிமிடத்தில் பிரான்சின்  Calais எனும் இடத்தினை அடைய எனது GPS ல் சுவீஸ் ற்கு முதலில் போகவேண்டிய மச்சானின் முகவரியை இட்டேன்....  இன்னமும் போகவேண்டிய தூரம் 560 மைல்களைக் காட்டியது,  இதுவரை இடமிருந்த ஓட்டம் வலமாக மாற்றுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும் பின்னர் சரியாகிவிட்டது. 

மூன்று மணிநேர பிரயாணத்தின் பின்னர் ஓரிடத்தில் தரித்து சிறிது இளைப்பாறியபின்னர் மீண்டும் மகிழ்வூந்து சுவீஸ் நோக்கிய பயணத்தினைத் தொடர்ந்தது... தொடர்ந்த இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் பிரான்சின் எல்லையைக் கடந்தோம்.

மேகமுரசும் மலைத்தொடர்கள் காணும் இடமெங்கும் படர்ந்திருந்தது, பலமுறை வந்திருந்த போதும் பார்த்திராததுபோல் புதுவகை ரம்மியத்தை மனதிற்குத் தந்தது,  சாலையின் தூரங்கள் இந்த அழகினில் அமிழ்ந்து போனது.  மலையைக் குடைந்து அமைத்த பாதைகளும் மலையோரப் பாதைகளும் கொஞ்சம் திகிலாக இருந்தாலும் திகட்டாத ஒரு அனுபவத்தினை மனதில் ஏற்படுத்திவிட்டது.

எமது வரவுக்காகக் காத்திருந்த மச்சான் குடும்பத்தினரின் வரவேற்பில் திக்குமுக்காடி அன்றைய இரவுப் பொழுதினை அங்கேயே போக்கினோம்.. காலை எழுந்தால் “இன்றும் ஒருநாள் இருந்து போங்கள்” எனும் அன்புக் கட்டளை..  “அச்சோ வந்ததே ஐந்து நாட்கள் அதில் வர ஒன்றும் போக ஒன்றும் போனால் மிச்சம் மூன்று நாட்கள்தான், இன்னும் போக இருக்கும் உறவினர் வீடுகளோ ஐந்து” என்று கணக்குக் காட்டி பிரிய விருப்பமின்றி விடைபெற்றோம்.

நாட்டுப் பிரச்சனைகளால் வீடுவிட்டு சிதறுண்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து தமது வாழ்வினை அங்கேயே நிலை நிறுவிக்கொண்ட ஈழத்து உறவுகள் எத்தனை எத்தனையோ...?  உலகில் எங்கு சென்றாலும் எமக்குச் சொந்தம் இருக்கும் ஆனால் சொந்தமாக ஒரு நாடுதான் இல்லை.

அங்கிருந்து Zurich எனும் இடத்தில் இரண்டு சொந்தக் காரர்கள் வீட்டிற்குச் சென்று பின்னர் மனைவியின் தோழியின் வீட்டிற்கும் சென்றோம்,  பின்னர் தோழி புவனாவின் திருமண நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் போது நிஷா மன்றத்தில் இருப்பதனை அறிந்துகொண்டேன் , முற்கூட்டியே எனது வரவினை அறிவிக்கவில்லை என்பதாலும் நிஷாம்மா இப்பல்லாம் ரொம்ப வேலையா இருப்பாங்க என்ற நினைப்பினாலும் போய் சிரமப் படுத்த விரும்பவில்லை,  இருந்தாலும் நிஷாவைப் பார்த்தது இல்லை வந்து விட்டு பார்க்காது போக மனமும் வரவில்லை அதனால் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஞாயிறு வந்து சந்திப்பதாகச் சொன்னேன். 

ஞாயிறு மதிய உணவினை உறவினர் ஒருவர் வீட்டில் முடித்துக் கொண்டு  Interlaken நோக்கி எனது மகிழ்வூர்ந்து மகிழ்வாகப் புறப் பட்டது அம்மாவும் அக்காவும் வேறு உறவினருடன் நின்றுவிட எங்களுடன் அக்கா ஒருவரின் மகளும் வந்தார்.
இன்ரலாகன் மிகமிக அழகாக இருந்தது, ஒருகணம் வாகனத்தினை நிறுத்திவிட்டு அழகினை இரசிக்கவேண்டும் போல் இருந்தது... அத்தனை கொள்ளை அழகு அந்த இடம், நிஷா அங்கு இருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்....


எழுத்துக்களிலும், வார்த்தைகளிலும் சந்தித்த நிஷா வை முதல் முதல் நேரில் பார்த்தேன்... இன்முகத்துடன் வரவேற்றார் அவரது அப்பா பிள்ளைகள்,பிரபா அனைவரும் அன்பாகப் பழகினர்.  இடத்தினைப் பார்க்கவேண்டும் என்று எனது விருப்பினைச் சொல்ல பிரபாவும் நிஷாவும் எப்சியுமாக எம்மை முதலில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று எமக்கும் பிள்ளைகளிற்கும் உடுப்புக்கள் வாங்கி அன்பளிப்புச் செய்தார்கள், பின்னர் பரம்ஸ்சின் அன்புப் பரிசு எனப் பிள்ளைகளிற்கு மேலும் உடுப்புக்கள் வாங்கிக் கொடுத்து திணறடித்துவிட்டார்கள், நன்றிகள் நிஷாவிற்கும் பரம்ஸ்ற்கும்...
நிஷா,பிரபா,எப்சியுடன் எனது குடும்பம்



இந்தியாவில் இருந்து வந்து சூட்டிங் செய்யும் இடம் என்று கூட்டிச்சென்று காட்டினார்கள், ஞாயிற்றுக் கிழமையிலும் மிகவும் அதிகமான மக்கள் நடமாட்டம் இருந்தது. கண்கவரும் அழகுப் பிரதேசம் மனதில் இன்னுமொருமுறை இங்கு வரவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.பின்னர் எமது சூட்டிங் அங்கு ஆரம்பமானது 


குதூகலத்தில் குதிக்கும் பிள்ளைகள்

எப்சியுடன் ப்ரித்திகா




சுவீஸ் சாப்பாட்டில் ஒரு சுற்றுப் பெருத்த நாம்

பிரபா நிஷாகுடும்பத்துடன் நமது குடும்பம் 
பற்பசை விளம்பரத்திற்கான சூட்டிங்கா இது...?




இரவுச் சாப்பாட்டினைத் தமது வீட்டில் சாப்பிடும்படி நிஷா வற்புறுத்தினார், இன்னும் பல இடங்களிற்குப் போகவேண்டி இருந்ததால் எமது நிலையினைச் சொல்ல பின்னர் பிரபா எல்லோரிற்கும் ஐஸ்கிறீம் வாங்கித்தந்தார், விடைபெற்றுக் கொண்டு எமது மீதிப் பயணங்களையும் முடித்துக் கொண்டு 31ம் திகதி வீடு திரும்பினோம்



பொறுமையாக வாசித்த உங்களிற்கு நன்றி...