திருந்தாத (து) மனது!




திரைகளில் போட்டிடும்
படங்கள் கதையென
உள்ளம் அறியும் - இருந்தும்
கதையினில் வருகின்ற
காட்சிகள் கண்டே.....
கன்னத்தில் ஈரம் வடியும் !

இதுபோல்...
வாழ்வினில் ஆடிடும் ஆட்டம்
அதற்காய் போட்டிடும் வேஷம்.....

நாடகமென்றே
உள்ளம் உணர்ந்தும் -பின்
மனதினில் திரைகள் மூடும்
இருந்தும்
உள்ளே இருந்தொரு மிருகம்
மெல்ல விலக்கிப் பார்க்கும்...

விழிகளின் திரைகள்
மூடும் - இருந்தும்
விழிகளில் கரைகளை
உடைத்தே வெள்ளம் ஓடும்....!!


நெஞ்சே நீ நில்லு !






நெஞ்சே நீ நில்லு
இனி போகுமிடம்
ஏது சொல்லு..?


கனவுகளில் வாழ்கின்றாய்
கற்பனையில் மாழ்கின்றாய்
நினைவுகளில் சாகின்றாய்
நான் போகுமிடம் போக
ஏனோ முரண்டு பிடிக்கின்றாய்...?


கண்ணிமைக்கும் நேரத்தில்
காததூரம் போகின்றாய் -நான்
முன்நோக்கிப் போகையில்
நீயோ பின்னோக்கிப் போகின்றாய்....
இருக்கும் இடம் விட்டு
எங்கே நீ போகின்றாய்....?




நாம் போகுமிடம் போக
உனை நானும்
எனை நீயும் கூட்டிச்செல்ல
நெஞ்சே நீ நில்லு.....!




காலக் கண்ணாடி



பிறந்து வளர்ந்து வளமாய்

வாழ வழி தேடி
நாளும் கிளமை பாரா
நோயும் நொடியும் உணரா
வேலை பலவும் செய்து....

இணையாய்த் துணையும் தேடி
(அவள்) வரவால் கருவுருவாக்கி
சேயும் பிறக்க வைத்து....


வளரும் சேய்க்கு மென்றும்
வசதிகள் செய்ய வென்றும்
மாய்ந்தே பொருட்கள் தேடிப்...

பின் -

களைத்துக் கை கால் முகம் கழுவி
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!

ஏதோ குறைவதாய்
திரும்பிப் பார்க்கின்றேன்

என் நினைவுக் குழந்தைகள் - கைகளில்
விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!