முட்டை

முட்டை

வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!
நியதி..!
பூட்டிய வீட்டுக்குள்
புளுங்கிக் கொண்டிருந்தேன்.....

காற்றினைத்தேடி
கதவினைத் திறந்தேன்......
வந்தது காற்று !

ஒரு முறை.....

பூஞ் சோலையில் புகுந்து
பூக்களில் புரண்டு
புதுத் தென்றலாய் மிதந்து
(பூ) வாசனையோடு...
வாசலில்- வந்தது !

மறுமுறை.......

சாக்கடையில் புகுந்து
சகதிகளில் நனைந்து
நாற்றத்தைச் சுமந்தபடி....
வாசலில்- வந்தது !

மறுமுறை......

கோவிலில் புகுந்து
தீபத்தில் எரிந்து
தூபத்துள் புகைந்து
தெய்வீக வாசனையாய்.....
வாசலில்- வந்தது !

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு காற்று......
வாசலில்- தேடி வரும்.....!

ஒவ்வொரு காற்றைப் போல்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு மனிதர்....
வாசலில்- தேடி வரும்....!ஒவ்வொரு காற்றையும்
சுவாசிக்கப் பழகுதல் போல்...
ஒவ்வொரு மனிதரையும்-
நேசிக்கப் பழகவேண்டும்...!
புகலிடம்!

படம்

அவள் ஒன்றும்

இந்த மர மனங்களிடம்
கனிகளுக்காக -
காத்திருக்கவில்லை.....
அது - தரும்
நிழலுக்காகத்தான்......
காத்திருந்தாள்!

அவள்- கனத்த
இதயத்தில்...
நினைத்த எண்ணங்கள்
சருகாகிப் போனதால்...!

அந்தச் சருகுகளைக்கூட
உரமாக்கி-அந்த மர(மன)ங்கள்
மேலும் ஓங்கி வளர்கின்றன
அதனால்தான்....

இன்று-அவள்
வெயிலினில் கூட...
வெறுப்பின்றி நடக்கின்றாள்

இனி- அவள்
ஒதுங்கப் போவது
எந்த(மர) நிழலிலோ....?
இல்லை
இந்த வெயில் தான்
அவளின்...புகலிடமோ....??
படம்


காதல் ப் “பா” (வெண்பா)

என்றாய் யெனதுயிர் நீயென்றாய் யுன்மனதைத்
தந்தாய் யெனதுதாய் போலானாய் - வந்தாய்
வழமான வாழ்வெனக்குத் தந்தாய் தனியாய்த்
தவித்திருந்த போதுதுணை நீயானாய், வென்றாய்
மனமெனதை நன்றாய் வழிநடத்திச் சென்றாய்
எனக்காக எல்லாம்தந் தாய்..!

**********************************************

காண்பாயே காலமும் கரைந்தே தொடர்கிறதே
வேண்டாத போதும் வந்திடும் - முதுமையிலும்
என்னன்பும் சேர்ந்தே தொடர்ந்திடும் முன்னையே
என்றுமெனை ஏற்பாயா நீ...?!


***********************************************
பார்வையாலும் சொல்வாய்யுன் காதலை ஊமையாய்
பாராத போதும் நினைவாவாய் -தீராத
நோய்போலவுன்னினைவால்தேய்ந்தாலும்வாழ்விக்கும்
மூலிகையாய் நெஞ்சினில் நீ..!

**********************************************

நீயே நினைவாவாய் நீங்காமல் என்னிழலாய்ச்
சேர்ந்தே தொடர்ந்து நிஜமாவாய் - வார்த்தையில்
சொல்ல முடியாத உண்மை உணர்வாய்
இருப்பாயே என்னிலென்றும் நீ...!


***********************************************

உள்வாங்கும் காற்றின் சுவாசமுன் வாசமே
கள்போலக் காதல் களிப்பூட்டும் - உள்ளேறும்
மூச்சோடும் காற்றாகிக் காதல் உயிர்ப்பூட்டும்
பேச்சோடும் மூச்சோடும் நீ.....!

***************************************************“பாப்பா” வின் “வெண்பா” ப் “பா”

இது ஒரு சிறிய முயற்சியாக தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம். எனும் மூன்று இனத்தில் ஓரின எழுத்துக்களை மட்டுமே கொண்டு ஒரு பாவில் எழுதிடும் முயற்சி


முதலில் வல்லினமான கு,சு டு,து,பு,று

பற்றுதே பற்றிது பற்றிப் பிறகு
சிறகு சிறைபடப் போற்றுது -சித்துக்
குறுடு சிறப்பொடு பித்துப் பிடித்துப்
பிதற்றப் பிறப்புக் கொடிது..!ஆசா பாசங்களானது எம்மைப் பற்றும் போது அதற்கு நாம் அடிமையாகி அதுவே நல்லதெனப் போற்றுவோம்... அதிலிருந்து விடுபடமுடியாது மூளை அம்மாயைக்குள் அமிழ்ந்து படும் துன்பத்தினால் பிறப்பானது கொடியதாகும்...
இடையினம்

ய,ர,ல,வ,ழ,ள

விழியால் வரைவாய் வழியை விரைவாய்
விழியாள் வலையாய் யலைய - விழுவாய்
யுயிராய் யெழுவாய் ரவியாய் யொளிர்வாய்
வளர்வாய் விரவியே வாழ்வு..!

விழி வழி காட்டும் பாதையில் போவாய்... பெண்ணின் வலையில் வீழ்ந்து புத்துயிர் வந்ததாய் எழுந்து சிறப்புடன் திகழ்ந்து எல்லோருடனும் இணைந்த வாழ்வுஅடுத்து மெல்லினம்

ஞ,ங,ந,ண,ம.ன.


மண்ணும் மணமும் மினமென்னும் முன்னமே
நின்னை நினைமனம் மின்னுமே - நம்மின
மனைமணி மன்னனும் மானமே மேன்மை
மனமென்னும் ஞானமும் நீ..!
நாட்டை மக்களை எண்ணுவதன் போதெல்லாம் உனதெண்ணம்தான் முன்னே வரும் நம்குடி மக்களின் மன்னன் போன்றவனும் இனமானம்மிக்கவனும் நீ!

இழப்புகளும் வளற்சிக்கே.....

வளர்ந்து விட்ட தென்னை
வாடியது-தன்
உடலைப்பார்த்து!

தான் இழந்துவிட்ட
ஓலைகள் எத்தனை...
எண்ணிப் பார்த்தது
வடுக்களை...கீழே வீழ்ந்து விட்ட
ஓலையொன்று
ஆறுதல் சொன்னது!வந்து போகும்
சொந்தம் யாவும்
நிலைப்பதில்லை
எனது வீழ்ச்சியிலும்
உனக்கு வளர்ச்சியுண்டு!இழப்பின் வடுவை-நீ
பாராதே....
தவித்திருக்கும்-மானிடர்கு
இளனீர் கொடு...!

உன் பிறப்பின் நோக்கை
அறிந்துவிடு...


அதனால் வடுவை பாராதே
வானை நோக்கி-இன்னும்
வளர்ந்து விடு..!

சுயம் + நலம்
சுயம் + நலம்

நட்டு வைத்த பூச்செடிக்கு
பாத்தி கட்டி
பசளை இட்டு நீர் விடுவேன்!
துளிர்விடும் அரும்பு பார்த்து
என் முகம் மலர்வேன்.....!
காட்டு வழி போகையிலும்
பல செடிகள் பார்ப்பேன்!
தானாய் முளைகளிட்டு
பரந்து வளர்ந்து நிக்கும்....!
நான் வைத்த செடிக்குமட்டும்
நான்தான் நீர் விடணும்
நெருப்பு வெயில் கண்டால்....
முகமெல்லாம் வாடிநிற்கும்!
அதற்கும் நான் தான்
நிழல் தரணும்..!
என்றாலும் வளர்க்கின்றேன்
அச்செடியை -
என் வீட்டின் அண்டையிலே!
வளர்ந்த பின்னால் ...
கனிதரும் என்றும் !
களைத்தபின்னால் - நான்
இளைப்பாற இடந்தருமென்றும்...!

அவள்
பிறக்கும் போது
புரியாத பல முகங்கள்
அழுதுகொள்வேன்
அணைத்துக் கொள்வாள்.....
அவள் !

தட்டித் தடவி
தவளும் போதும்
எட்டிப் பாதங்கள்
பதிக்கும் போதும்
தடக்கி வீழ்வேன்
தாங்கிக் கொள்வாள்......
அவள் !

கண்கள் விழிக்க வைத்து
கதைகள் கேட்ட போதும்
உள்ளே இருக்கையிலே
எட்டி உதைத்த போதும்
சற்றும் சலிக்காமல்-எனை
வருடி வளரவைத்தாள்......
அவள் !

காய்ச்சல் வந்து
படுக்கும் போதும்
கற்கள் முட்கள்
தைக்கும் போதும்
எனது நோயால்
தானே நோவுறுவாள்.....
அவள் !

முற்றத்து மண்ணில்
சுண்டுவிரல்- தான் - பிடித்து
''அ'' எழுதச் சொல்லித்தந்த
முதல் ஆசிரியை....
அவள் !

ஆம்.....

கண்கண்ட தெய்வம்
அவள் !
கற்பிக்கும் ஆசான்
அவள் !
பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய் அவள்..!

யாரிவள்

வெண் நிறத்தாள்
நான் மாலையில்
வீடு வர
இதள் மலர்வாள்...

காற்றோடு சேர்ந்து
நான் சுவாசிக்கும்
மூச்சினில்
நறு மணமாய்
கலந்திடுவாள்....

என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....

நான் பூஜிக்கும்
தெய்வத்தின்-காலடியில்
தவமிருப்பாள்...

இன்று -என்
கல்யாண வீட்டினில்
கழுத்தினைப் பிடித்தபடி
தொங்குகின்றாள்...

ஆம் ....

இவள்-என்
வீட்டுத் தோட்டத்தில் பூத்த
மல்லிகை!!


தாக்கம்

ஏக்கம்


நிலவதனைத் தழுவிநின்ற
முகிலவன் -ஏன்
கண்ணீரைச் சொரிகின்றான்
இன்று
மதியதனைக் காணாமல்
அவனும் (நிம்) மதியிழந்து போனானோ...??

உணராயா..?

விருட்சம்.

தேனுண்ணும் வண்டிலும்
தென்றலின் தேரிலும்
பயணம் செய்வேன்!
பூக்களைக் கருவாக்கி
கனிகளின் விதைகளின்
கருவறையில் சிறையுறுவேன்...!

மனிதனும் பற் பல மிருகமும்
கனிகளின் சதைகளை உண்டபின்
பூமியில் புதை படுவேன்....!

காலத்தின் வருகைக்காய்
கனகாலம் காத்திருந்து
கருவறைச் சிறை உடைத்து
பூமியை பிளந்தெழுவேன்...!

வீரிய வேர்களின் வேதனையிலும்
வானத்தை நோக்கி தலை நிமிர்வேன்!
மண்ணினில் உயிர்களின் வாழ்வுக்கும்
விண்ணினில் மழை மேகம் கூடுதற்கும்
நான் தான் வழி சமைப்பேன்...!

என் கிளைகள் பரவும்
கிளைகளில் இருந்தும்
விழுதுகள் தோன்றும்!
வேர்கள் வியாபித்து
வெளிவந்து குட்டிகள் ஈணும்...!

பூத்துக் காய்த்து கனிதந்து
விதை கொண்டுமென்
சந்ததி வழரும் - நான்
விருட்சம்!!!

அக்க(றை)ரை
மஞ்சல் வானம் கொஞ்சம் இறங்கி
கடல் மேனி தழுவ
செங்கதிர் மறைந்தது கண்டு
வெண் பிறை முளைக்க...

அந்த அந்தி வேளையில்
எந்தன் சிந்தை அக்கரை நினைத்தது..!

எதிர் காற்றும் அலையும்
மாறி.. மாறி அடிக்க
துடுப்பை வலித என் கைகள்

களைப்பினால் வலிப்பினும்- மனம்
அக்கரை ஆசையில்
மேலும்... மேலும் (துடுப்பை) வலித்தது..!

நடுக் கடல் அடைந்ததும்
சீறிய அலை ஒன்று
என் துடுப்பை இழுத்துப் போக .. !

அக்கரை இனி எப்படிப் போவதென.?

என் மனம் அலைக்கழிய..!

அலை கடல் மீதினில்
நீந்திடத் தெரியா -
நான்
காற்றினின் திசையினில்
போவதாய்
பாய்மரம் விரிக்கிறேன்.....!

இனி நான் சேர்வது

எக்கரை மீதிலோ ..?
அக் கரை மீதினில்
அக்கறையாய் இருந்திடணும்..!!!முடிவு முடிவல்ல.

பூக்கள் மடிந்ததாய்
மனம் வாடாதே..!

பூக்கள் மடிந்ததால்
காய்கள் உருவாகி
கனியாகி ... விதையாலே
விருட்சம் உருவாகும்...!

அத்தனை விருட்சமும்
எத்தனை பூக்கள் தரும்..!!?
பூரிப்புக் கொள்..!!

சூரியன் மறைந்ததாய்
மனம் வருந்தாதே..!

சூரியன் மறைந்தால்
சந்திரன் உருவாகி
நட்சத்திரம் பூக்கும்..!

விடி வெள்ளி முளைத்து
விடியல் கொண்டு வரும்...!

விடியல் உனக்கு
புது நாளைக் கொண்டு வரும்.!
விழித்துக் கொண்டே
புது நாளை ஆரம்பி...!

மறந்துவிடாதே .....

தொடக்கங்கள் யாவும்
முடிவு பெறும் ..!

அந்த முடிவினில் கூட
புதிய தொடக்கம்
காத்திருக்கும்...!!

முடிவைப் பற்றி
கவலைப்படாதே

தொடர்ந்திடு.....
புதிய ஆரம்பத்திற்காக...!!!

தாலாட்டுப் பாடமாட்டேன்...!


நாள் பார்த்து நிலையம் பார்த்து
கட்டி வைத்த வீடெல்லாம்
யார் பார்க்கவும் முடியாமல்
குண்டு போட்டு சிதைச்சாச்சு
சிதையாத உறுதியுடன்
எமக்கான எதிர்காலம் உருவாக்க ....
இது கண்ணுறங்கும் காலமல்ல...
விழித்திரு என் வீர மகனே...!


மரத்தடி தான் இப்போ நம்வீடு
மேலே குருவிக்கும் உண்டு ஒரு வீ(கூ)டு
கீழே எறும்புக்கும் உண்டு ஒரு வாழ்வு
நாதி அற்ற தமிழனுக்கு யாரு வந்து உதவிடுவார்..?
நம் விதியை நாம் தான் எழுதிடனும்.....
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீர மகனே...!

கொட்டும் மழை போலே
குண்டுகள் பொழிந்தாலும்
விட்டு ஓடாது (ஈழ)தமிழனுக்கு வீரம்
அடிமை விலங்குடைத்து
பகையை விரட்டும் நாளை எண்ணி...
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீர மகனே....!

பாட்டன் முப்பாட்டன் ஆண்டதிந்த மண்
அதை அன்னியன் அபகரிக்க
விடலாமா சொல்...!
உன் அப்பன்மீட்கப் போய்
மாண்டதும் இந்த தமிழ் மண்ணில்
இதை நீயும் மீட்டிடும் காலம் வரலாம் ....
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீரத் தமிழ் மகனே.....!

ஆரோ... ஆராரோ வந்திங்கு போனார்கள்
யாரு எமக்கான தீர்வொன்றைத் தந்தார்கள்..?
எமை தீர்த்துவிட எதிரிக்கு ஆயுதங்கள் கொடுத்தார்கள்....
இவை எல்லாம் எதிர்த்து நிற்க வேண்டும் என்றால்
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீரத் திருமகனே ....!