சுவீஸ் பயணமும் நிஷாவுடன் சந்திப்பும்...
கோடை விடுமுறை விடைபெற இருந்த வேளை எங்காவது போகலாமா...? எனும் எண்ணம் எழுந்து நெஞ்சைச் சுரண்டியது “போலாமே” என்று எனது எண்ணத் தீக்கு நெய்யிட்டாள் அன்பு மனைவி.
பிள்ளைகளின் ஆரவாரம் “அங்கே போவோம் ... இல்லை.. இல்லை  இங்கே போவோம்”  என்றிருக்க, அம்மா சொன்னார் “ரூபியின் பிள்ளையின் விஷேஷம் ஊருக்குப் போய்த்தான் செய்தார்கள் ஒருக்கால் சுவீசிற்குப் போய் அங்கேயும் போய் வருவோமே..!” என்று.
“அர்ரா சக்கை... அப்ப நீங்களும் கிளம்பியாச்சோ..?”  என மகிழ்வுடன் பயணத்தை எப்படி நகர்த்தலாம் எனும் திட்டத்தை எல்லோருமாகப் போட்டோம்.....  
எங்களில் எட்டுப் பேர் எல்லோரும் விமானத்தில் போனால் உறவினர்க்கு ஏற்றி இறக்கச் சிரமமாகிவிடும், எனது வாகனத்தில் ஏழுபேரே போகலாம், அப்படியென்றால் யார் நிற்பது...?
ஒவ்வொருவரும் தாம் நிற்பதாக முடிவெடுக்க இறுதியில் அப்பாவே அந்த அதிஷ்ரசாலியாகினார்.

ஆகஸ்ட் 26ம் திகதி வீட்டில் இருந்து கிளம்பி ஒரு மணி நேரட்தில் Eurotunnel ஐ வந்தடைந்தோம் அங்கிருந்து 35 நிமிடத்தில் பிரான்சின்  Calais எனும் இடத்தினை அடைய எனது GPS ல் சுவீஸ் ற்கு முதலில் போகவேண்டிய மச்சானின் முகவரியை இட்டேன்....  இன்னமும் போகவேண்டிய தூரம் 560 மைல்களைக் காட்டியது,  இதுவரை இடமிருந்த ஓட்டம் வலமாக மாற்றுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும் பின்னர் சரியாகிவிட்டது. 

மூன்று மணிநேர பிரயாணத்தின் பின்னர் ஓரிடத்தில் தரித்து சிறிது இளைப்பாறியபின்னர் மீண்டும் மகிழ்வூந்து சுவீஸ் நோக்கிய பயணத்தினைத் தொடர்ந்தது... தொடர்ந்த இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் பிரான்சின் எல்லையைக் கடந்தோம்.

மேகமுரசும் மலைத்தொடர்கள் காணும் இடமெங்கும் படர்ந்திருந்தது, பலமுறை வந்திருந்த போதும் பார்த்திராததுபோல் புதுவகை ரம்மியத்தை மனதிற்குத் தந்தது,  சாலையின் தூரங்கள் இந்த அழகினில் அமிழ்ந்து போனது.  மலையைக் குடைந்து அமைத்த பாதைகளும் மலையோரப் பாதைகளும் கொஞ்சம் திகிலாக இருந்தாலும் திகட்டாத ஒரு அனுபவத்தினை மனதில் ஏற்படுத்திவிட்டது.

எமது வரவுக்காகக் காத்திருந்த மச்சான் குடும்பத்தினரின் வரவேற்பில் திக்குமுக்காடி அன்றைய இரவுப் பொழுதினை அங்கேயே போக்கினோம்.. காலை எழுந்தால் “இன்றும் ஒருநாள் இருந்து போங்கள்” எனும் அன்புக் கட்டளை..  “அச்சோ வந்ததே ஐந்து நாட்கள் அதில் வர ஒன்றும் போக ஒன்றும் போனால் மிச்சம் மூன்று நாட்கள்தான், இன்னும் போக இருக்கும் உறவினர் வீடுகளோ ஐந்து” என்று கணக்குக் காட்டி பிரிய விருப்பமின்றி விடைபெற்றோம்.

நாட்டுப் பிரச்சனைகளால் வீடுவிட்டு சிதறுண்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து தமது வாழ்வினை அங்கேயே நிலை நிறுவிக்கொண்ட ஈழத்து உறவுகள் எத்தனை எத்தனையோ...?  உலகில் எங்கு சென்றாலும் எமக்குச் சொந்தம் இருக்கும் ஆனால் சொந்தமாக ஒரு நாடுதான் இல்லை.

அங்கிருந்து Zurich எனும் இடத்தில் இரண்டு சொந்தக் காரர்கள் வீட்டிற்குச் சென்று பின்னர் மனைவியின் தோழியின் வீட்டிற்கும் சென்றோம்,  பின்னர் தோழி புவனாவின் திருமண நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் போது நிஷா மன்றத்தில் இருப்பதனை அறிந்துகொண்டேன் , முற்கூட்டியே எனது வரவினை அறிவிக்கவில்லை என்பதாலும் நிஷாம்மா இப்பல்லாம் ரொம்ப வேலையா இருப்பாங்க என்ற நினைப்பினாலும் போய் சிரமப் படுத்த விரும்பவில்லை,  இருந்தாலும் நிஷாவைப் பார்த்தது இல்லை வந்து விட்டு பார்க்காது போக மனமும் வரவில்லை அதனால் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஞாயிறு வந்து சந்திப்பதாகச் சொன்னேன். 

ஞாயிறு மதிய உணவினை உறவினர் ஒருவர் வீட்டில் முடித்துக் கொண்டு  Interlaken நோக்கி எனது மகிழ்வூர்ந்து மகிழ்வாகப் புறப் பட்டது அம்மாவும் அக்காவும் வேறு உறவினருடன் நின்றுவிட எங்களுடன் அக்கா ஒருவரின் மகளும் வந்தார்.
இன்ரலாகன் மிகமிக அழகாக இருந்தது, ஒருகணம் வாகனத்தினை நிறுத்திவிட்டு அழகினை இரசிக்கவேண்டும் போல் இருந்தது... அத்தனை கொள்ளை அழகு அந்த இடம், நிஷா அங்கு இருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்....


எழுத்துக்களிலும், வார்த்தைகளிலும் சந்தித்த நிஷா வை முதல் முதல் நேரில் பார்த்தேன்... இன்முகத்துடன் வரவேற்றார் அவரது அப்பா பிள்ளைகள்,பிரபா அனைவரும் அன்பாகப் பழகினர்.  இடத்தினைப் பார்க்கவேண்டும் என்று எனது விருப்பினைச் சொல்ல பிரபாவும் நிஷாவும் எப்சியுமாக எம்மை முதலில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று எமக்கும் பிள்ளைகளிற்கும் உடுப்புக்கள் வாங்கி அன்பளிப்புச் செய்தார்கள், பின்னர் பரம்ஸ்சின் அன்புப் பரிசு எனப் பிள்ளைகளிற்கு மேலும் உடுப்புக்கள் வாங்கிக் கொடுத்து திணறடித்துவிட்டார்கள், நன்றிகள் நிஷாவிற்கும் பரம்ஸ்ற்கும்...
நிஷா,பிரபா,எப்சியுடன் எனது குடும்பம்இந்தியாவில் இருந்து வந்து சூட்டிங் செய்யும் இடம் என்று கூட்டிச்சென்று காட்டினார்கள், ஞாயிற்றுக் கிழமையிலும் மிகவும் அதிகமான மக்கள் நடமாட்டம் இருந்தது. கண்கவரும் அழகுப் பிரதேசம் மனதில் இன்னுமொருமுறை இங்கு வரவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.பின்னர் எமது சூட்டிங் அங்கு ஆரம்பமானது 


குதூகலத்தில் குதிக்கும் பிள்ளைகள்

எப்சியுடன் ப்ரித்திகா
சுவீஸ் சாப்பாட்டில் ஒரு சுற்றுப் பெருத்த நாம்

பிரபா நிஷாகுடும்பத்துடன் நமது குடும்பம் 
பற்பசை விளம்பரத்திற்கான சூட்டிங்கா இது...?
இரவுச் சாப்பாட்டினைத் தமது வீட்டில் சாப்பிடும்படி நிஷா வற்புறுத்தினார், இன்னும் பல இடங்களிற்குப் போகவேண்டி இருந்ததால் எமது நிலையினைச் சொல்ல பின்னர் பிரபா எல்லோரிற்கும் ஐஸ்கிறீம் வாங்கித்தந்தார், விடைபெற்றுக் கொண்டு எமது மீதிப் பயணங்களையும் முடித்துக் கொண்டு 31ம் திகதி வீடு திரும்பினோம்பொறுமையாக வாசித்த உங்களிற்கு நன்றி...4 கருத்துகள்:

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள அண்ணா,

தங்களின் சுற்றுபயணம் நல்லபடியாக மகிழ்வாய் அமைந்ததில், அதை இங்கு படித்ததில் மிக்க மகிழ்ச்சி...

ஆனா அப்பாவ விட்டுபோனதுதான் வருத்தம்...

வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும்...

பாலன் said...

நன்றி வாசன் :)

Priya said...

பாலன் உங்களின் பயணம் இனிதாக அமைந்ததில் சந்தோஷம். உங்க குடும்பத்தினரையும் (படத்தில்) பார்த்ததில் கூடுதல் மகிழ்ச்சி!
படங்களுடன் பயணக்கட்டுரையும் நன்றாக இருந்தது!

பாலன் said...

நன்றி ப்ரியா

Post a Comment