Tooth Fairy




ரு கையை அவள் பற்றிக்கொண்டிருந்தாள் “ஒன்றுமே யோசிக்கவேண்டாம் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று அவள் தலைமாட்டில் நின்றபடியே மறுகையால் தலையை வருடிவிட்டேன் “நெஞ்சிற்குக் கீழ் உணர்வேதும் இல்லை வயிற்றில்தான் ஏதோ பேனா கொண்டு கீறுவதாக உணர்கின்றேன்” என்றாள். இருமுறை அனுபவம் இருந்தாலும் இது இன்று ஏதோ புதுவகை உணர்வாகவே இருந்தது, மனதில் இத்தனைநாள் ஒரு எதிர்பார்ப்பு இருந்தும், இன்று “மனதில் எதுவித எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளாதே...” என்று, என் மனதினை மாற்றிச் சொன்னேன். இத்தனை வலியிலும் ஒரு புன்னகை, “எத்தனையானாலும் ஒரு பெண்பிள்ளை பெற்றுத்தராமல் போகமாட்டேன்” என்றாள், “லூசு பேசாதே எதுவாயினும் நல்லபடி ஆரோக்கியமாய் வரட்டும்” என்றேன். முதல் இரு பிள்ளைகளை முற்கூட்டி அறிந்திருந்தாலும் உடைந்திடும் மனதோடு சுமந்திட வேண்டாமென்று இப்பிள்ளையின் பால் பற்றி முற்கூட்டியே தெரிந்திட விரும்பவில்லை.  இருந்தாலும் பெண்பிள்ளை இல்லாவிட்டால் பரவாயில்லை அதுதான் நீ இருக்கிறாயே...” என்று சொல்வேன்.

                                                                           

அறுவை சிகிச்சைப் பிரிவில் எமக்கான அறையில் மெல்லிய இனிமையான இசை ஒலித்துக் கொண்டிருந்தது, அதையும் மீறிய “கீச்” சென்ற குரலில் குழந்தையின் அழுகைக் குரல், வைத்தியர் எம்மைப் பார்த்துக் கேட்டார் என்ன பிள்ளை வேண்டும் உங்களிற்கு, ஏதும் சொல்லாமல் நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். மனைவியின் கைப்பற்றல் இப்போது கொஞ்சம் அழுத்தமாக இருப்பதை உணர்ந்தேன், “பெண்பிள்ளை வேண்டும்” என்று சொன்னாள், “இதோ உங்கள் விருப்பப் படியே பெண்பிள்ளை” என வைத்தியர் சொல்ல, மனைவியின் கைப்பற்றல் மெல்ல இழகியது. கண்களில் சரை..சரையான கண்ணீர் வழிந்தோட மெல்லத் துடைத்துவிட்டு நெற்றியில் ஒரு முத்தம் வைத்தேன், “பிள்ளையைப் போய்ப் பாருங்கள்” என்றாள், “இல்லை வெட்டியதைத் தைத்து முடியுமட்டும் உன்னருகில் இருக்கேன்” என்று சொல்லும் போதே பிள்ளையைச் சுத்தம் செய்து ஒரு துணியில் போட்டெடுத்து என்கையில் தாதி ஒருவர் கொடுத்தார், கையில் வாங்கியதும் கட்டியணைத்திட வேண்டுமென்றிருந்தது பிஞ்சு உடல் நோகும் என்று மெல்லப் பூப்போல நெஞ்சுடன் சேர்த்தணைத்து வைத்திருந்தேன்.
எல்லையில்லா ஆனந்தத்துடன் மனைவியிடம் பிள்ளையைக் காட்ட அவள் அப்போதுதான் முதல் முதலில் என்னைப் பார்த்ததுபோல் என்முகம் பார்த்தாள். பின்னர் பிள்ளையைப் பார்த்து புன்முறுவல் செய்தாள்.


பின்னர் தாதி வந்து வாங்கிச் சென்று தமது கடமைகளைச் செய்தனர். அறுவை சிகிச்சை பூரணமாக முடிந்ததும் வேறு அறைக்கு மாற்றப் பட்டு சிகிச்சைகள் முடிந்ததும் மூன்று நாட்களில் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.
சின்னத் தேவதை கொஞ்சம் கொஞ்சமாக வளரலாணாள், தொட்டுவிடச் சிவத்துவிடும் தேகமதில் பட்டிடாமல் முத்தம் வைப்பேன், தொட்டுத் தூக்குகின்ற பேர்களிற்குக் கவனமென வுரைக்க எனைப் பார்த்துச் சிரித்து நிற்பார், தானே தவமிருந்து வரங்கொடுத்த தாய்த் தேவதைபோல் முகச் சாயல்



 அண்ணன்மார் அணைப்பினிலும் அன்பிலும் அலாதிப் பிரியம் அவளிற்கு, தாத்தா,பாட்டியென்றால் பால்கூட வேண்டாம்,



31ம் நாளில் மொட்டைத்தலையாக்கி பிறப்பு முடி கழித்து... பின்னர் முளைவிடும் புது முடி தடவிப் பார்ப்பதில் அவள் அண்ணன் மாருடன் எனக்கும் விருப்பமுண்டு, “கவனம் உச்சம் தலையில் தொடவேண்டாம்” என அம்மா சொல்வார், ஒரு ஐந்தாறு மாதமளவில் அவள் பிஞ்சுக் கரம் பிடித்து விளையாட்டுக் காட்டுகையில் மெல்ல என் விரல் பிடித்திழுத்து தன் வாயில் வைத்துக் கடித்தாள், பசியாய் இருப்பாளோ என்று பார்த்தால் சின்னப் பல்லொன்று வெளிவரும் முயற்சியில் முரசில் முட்டியிருந்தது....  ஆஹா... “அவியுங்க கொழுக்கட்டை” என்று சொல்லி ஊரெல்லாம் கூப்பிட்டுக் கொண்டாட்டம்தான்.



 தவளத் தொடங்கியதும் பின்னர் மெல்ல எழுந்தும் வீழ்ந்தும் நடக்கப் பழகியதும், பேசப் பழகியதும்,இப்போது போலிருக்கும்...






அதன் பின் ஒவ்வொன்றாய் வயதாகி.....
இப்போது ஐந்தாகிப் போனது, குட்டிக் கதையும், அம்பாரி யானையும், உப்புமூட்டை தூக்குவதும் இப்போதும் நடக்கிறது,

 பாலர் வகுப்பு முடித்து இப்போதான் முதலாம் வகுப்புப் போகப் போகின்றா... படிக்கச் சொல்லிச் சொன்னாலோ பாலர் வகுப்புத் தான் பாஸ் என்பாள் :)


ஐந்து வயதுதான் அதற்குள் ஒரு பல் ஆடுதென்றாள், அடுத்த நாள் கையோடு தன் பல்லொன்றைக் கொண்டுவந்துகாட்ட, தாருங்கள் குப்பைக்குள் போட என்றால் “இல்லையப்பா இன்றைக்குப் தூங்கும் போது தலையணைக்குக் கீழே வைத்துத் தூங்கப் போறேன் தூங்கியதும் tooth fairy வந்து பல்லினை எடுத்துக் கொண்டு எனக்குப் பணத்தினை வைத்து விட்டுப் போகும்”  என்றாள்....


 “யாரு சொன்னாங்க?” என்றால்
தனது ஆசிரியர் கதை சொல்லும் நேரத்தில் என்றாள். சரி அவளது நம்பிக்கையை ஏன் உடைப்பான்...


ஒரு தபாலுறையில் தனது பெயரை எழுதி அதற்குள் பல்லினை வைத்து ஒட்டிவிட்டு தலையணையின் கீழே வைத்தபடி தூங்கப் போனாள்.


தூங்கியதும் மனைவியும் நானும் மெதுவாக எழுந்து அவள் தலையணையின் கீழே வைத்திருந்த பல்லினை எடுத்து விட்டு பணத்தினை நான் வைக்கப் போனேன், சில்லறை வைத்திட மனமின்றி தாள் காசினை வைக்கப் போனேன், 
மனைவி சொன்னாள் “சின்னப் பிள்ளைக்கு பணத்தின் பெறுமதி தெரியாது நிறையச் சில்லறையாக வையுங்க சந்தோஷப் படுவாள்”


 


எத்தனை யுண்மை.  ஒவ்வொன்றின் பெறுமதிகளும் அதனை புரிந்திடும் போதே தெரிகின்றது,  இதுதான் பெறுமதியானது என்கின்ற நினைப்பில் இருந்தாலும் நமக்கு அந்த நினைப்பே அதனைப் பெறுமதியுள்ளதாகக் காட்டுகின்றது,  ஒன்றின் பெறுமதி ஒவ்வொருவர் மனதின் அடிப்படையிலேயே மதிக்கப் படுகின்றது.


காலை எழுந்ததும் ஓடிவந்து “அப்பா Tooth fairy இரவு வந்து காசு வைத்துவிட்டு பல்லினை எடுத்துப் போய் விட்டது”  என்று பிஞ்சுக் கைகளை விரித்து காசினைக் காட்டினாள் 1,2,3,.... என எண்ணி கடைசியில் "கனகாசு தந்திருக்கு" என்று சொல்ல , என்னிடம் தரும்படி கேட்டேன், இல்லை இது எனக்கு Tooth fairy தந்தது தனதென்று தனது அறையினில் பத்திரப் படுத்தினாள்
                                               

Tooth fairy நான்தான் என்று உண்மையைச் சொல்லிடவா...?  என எண்ணினேன் “இல்லை அவளது தேவதை நம்பிக்கையைக் கலைத்தால் அதனாலான மகிழ்ச்சியும் கலைந்திடக் கூடும், பணத்தினில் மீது பற்றுதல் இல்லை ஆனால் தேவதை கொடுத்ததான நம்பிக்கையிலேயே மகிழ்ந்திருக்கின்றாள், புரிந்திடும் பருவம் வரும் போது புரிந்திடப் போகின்றாள்... அதன் போதான நம்பிக்கைகள் மாறுபடும், ஒவ்வொன்றின் பெறுமதிகளின் மேலான கணிப்பீடுகளும் மாற்றம் பெற்றுவிடப் போகின்றன,அவர்கள் நம்பிக்கைகள்தான் அவர்கள் வாழ்க்கை, உலகம் எல்லாமே..!
நிஜங்கள் இல்லாத கதைகள் கூட ஒரு காலத்தில் மாறுதல் பெற்றுவிடும் அந்தக் காலங்களில் தேவதைகளிற்குப் பதிலாக நிஜமான மனிதர்களே வரக்கூடும்,  நிஜம்மட்டும் கேட்டு யாரும் வளர்ந்ததில்லையே, கற்பனையும் கனவுகளும் கலக்காத வாழ்க்கை இல்லை, கற்பனைகளை நிஜமாக எண்ணிக் கனவுகாணும் பிஞ்சு மனங்களை எதற்காகக் குழப்ப வேண்டும்..?  இப்போது இவர்களை இவர்களாகவே விட்டு விடுவோம், அவர்கள் மகிழ்ச்சியில் நாமும் பங்கு கொள்வோம்.!

9 கருத்துகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தங்களின் நினைவுகளை படிக்கும் சமயம் மிகவும் சிறு வயது நினைவுகள் என் நெஞ்சிலும்... மிக்க மிகு மகிழ்ச்சியாக...

ஆமாம் பாப்பா பெயரையே சொல்லவே இல்லை...

மகிழ்ச்சி என்று அவர்கள் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுக்கின்றேன்...

Unknown said...

மிக்க நன்றி வாசன், மகள் பெயர் பிரீத்திகா

SOS said...

வரிசைக்கிரமாக அழகான படங்களுடன் நிகழ்வுகளைக் கோர்த்துக் கொண்டு சென்றவிதம் மிக அருமை.

மூன்று பிள்ளைகளும் முத்துக்களாக மிளிர்கின்றனர். Tooth fairy விட tooth விழுந்த fairy மிக அழகு. என்றும் தங்கள் வாழ்வில் தேவதையின் நல்லாசி பெறுக வாழ்த்துக்கள்.

அண்ணாமலை..!! said...

நானும் கூட ஒரு அழகான கதை எழுதி வைத்துள்ளேன் நண்பரே!
அதனை நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன்!
நீங்கள் அனுமதித்தால் தங்கள் தேவதையின் படத்தை(பெயரையும்) அதில் இணைக்க ஆவல்!

உங்கள் நிகழ்ச்சிவர்ணனைகள் நெகிழ்ச்சியாய் இருக்கிறது!

Unknown said...

மிக்க நன்றி ஹேமா

Unknown said...

தங்கள் கதை காணும் ஆவலில் உள்ளேன் அண்ணா!
படத்தைப் பெயரை இணைப்பதில் ஆட்சேபனை இல்லை :)

Priya said...

பெண் குழந்தையை ரசித்து எழுதி இருப்பதை, ரசித்து படித்தேன்.படிக்கும் போது 'அபியும் நானும்' படம் நினைவுக்கு வந்தது.புகைப்படங்களும் அழகு!

அண்ணாமலை..!! said...

நன்றி நண்பரே!
தங்களின் ஒப்புதலுக்கு!

Unknown said...

நன்றி ப்ரியா, ப்ரீதியும் நானும் என தலையங்கம் வைத்திருக்கலாம் போலுள்ளது :)

Post a Comment