Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

கையற்ற பொம்மை





அனல்கக்கும் கூரைகள் பற்றும்
அடைக்கலம் தேடியே குழிபுக
அமிலமாய் எந்திரப் பறவைகள் 
எச்சமிடும்…..!


உயிர் வாடி வதங்கிட மெலியும்
உடலும் தாங்கித் தன் தாயும் சேயென
உறவினைக் காத்திட ஓடிடும் ஓட்டம்
உலகும் பார்க்கும்..!


நோய் தொற்றும் நீரின்றி நினைவுகெடும்
வான் கிழித்துப் பெய்யும் மழை
ஈயமாய் உடல்கிழித்து உயிர்குடிக்க
பாலின்றிப் பரிதவித்த பிள்ளை 
தாயிறந்த தறியாதே காய்ந்த முலை
சப்பும்..!


வேல்வந்து வினை தீர்க்கும் 
உமை வந்து அமுதூட்டும் எமை
“பார்”வந்து உயிர்மீட்கும் எனப் பார்த்திருக்க
கையற்ற பொம்மை யாயிருக்கும்

உலகில் மனிதம்! :pale:


மே 18


அழுதழுது தொழுதோம்
விழி நீரில் கரைந்தோம்
பொழுதொன்று போகையில்
விழும் உயிர்கள் பல நூறு..!

வேதனையில் விம்மினோம்
வீதிவரை கதறினோம்
காதுகொடுத்துக் கேட்போர்
மேதினியில் யாருமில்லை..!

குலைகுலையாய் கொத்துக்குண்டு
வகை தொகையாய் பொஸ்பரஸ்
வலையம் இதுதான் பாதுகாப்பென்றே
கொலையைச் செய்தார் கொடுமரசு...!

தட்டிக்கேட்பார் யாருமில்லை
தட்டிக் கொடுத்தார் இனவழிப்பை
தொட்டிப் பிள்ளையைக் கூட
விட்டு வைக்க வில்லை...!

மரணம் அன்று தமிழன் (மட்டும்)அன்று
மரணித்தது மனிதம் உலகிலென்றே
உரத்துச் சொல்லி உரிமை கேட்போம்
வரட்டும் தமிழீழம் என்றே..!






வலியுடன் சுமக்கும் நினைவில் இன்று ஒருவருடம் முடிவில்
இறுதிக்கட்டப் போரில் இழந்த மக்கள் போராட்ட வீரர்கள் அனைவரிற்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகின்றேன் அவர்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டுகின்றேன்.

முனகல்





ஒற்றை விரல்கள் பிடித்து
ஊரூராய் அலைந்ததுவும்
சொத்தைச் சுகத்தை விட்டு

பற்றைக் காடுகளில்

உயிர் காக்க ஓடியதும்..!


நித்தம் மழைபோல

குண்டுகள் வீழ்ந்ததுவும்

அன்னை மடி சிதைத்து

தந்தை உயிர் குடித்து-(என்னைத்)
துடி துடிக்க வைத்ததுவும்
எற்றை வரைக்கும் மறக்காது.!

இழந்த உயிர் இழந்ததுதான்
இருக்கும் உயிர் மீள

முட்கம்பி வேலிக்குள்

முகம் கிளிந்த - எதிர்கால
ஈழத்தின் முனகலின்று
எவர் காதில் கேட்கும்???

தாலாட்டுப் பாடமாட்டேன்...!


நாள் பார்த்து நிலையம் பார்த்து
கட்டி வைத்த வீடெல்லாம்
யார் பார்க்கவும் முடியாமல்
குண்டு போட்டு சிதைச்சாச்சு
சிதையாத உறுதியுடன்
எமக்கான எதிர்காலம் உருவாக்க ....
இது கண்ணுறங்கும் காலமல்ல...
விழித்திரு என் வீர மகனே...!


மரத்தடி தான் இப்போ நம்வீடு
மேலே குருவிக்கும் உண்டு ஒரு வீ(கூ)டு
கீழே எறும்புக்கும் உண்டு ஒரு வாழ்வு
நாதி அற்ற தமிழனுக்கு யாரு வந்து உதவிடுவார்..?
நம் விதியை நாம் தான் எழுதிடனும்.....
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீர மகனே...!

கொட்டும் மழை போலே
குண்டுகள் பொழிந்தாலும்
விட்டு ஓடாது (ஈழ)தமிழனுக்கு வீரம்
அடிமை விலங்குடைத்து
பகையை விரட்டும் நாளை எண்ணி...
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீர மகனே....!

பாட்டன் முப்பாட்டன் ஆண்டதிந்த மண்
அதை அன்னியன் அபகரிக்க
விடலாமா சொல்...!
உன் அப்பன்மீட்கப் போய்
மாண்டதும் இந்த தமிழ் மண்ணில்
இதை நீயும் மீட்டிடும் காலம் வரலாம் ....
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீரத் தமிழ் மகனே.....!

ஆரோ... ஆராரோ வந்திங்கு போனார்கள்
யாரு எமக்கான தீர்வொன்றைத் தந்தார்கள்..?
எமை தீர்த்துவிட எதிரிக்கு ஆயுதங்கள் கொடுத்தார்கள்....
இவை எல்லாம் எதிர்த்து நிற்க வேண்டும் என்றால்
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீரத் திருமகனே ....!